Reading Time: < 1 minute

கனடா எதிர்பார்த்ததை விட இலட்சக்கணக்கான அளவு குறைந்த பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளையே மார்ச் மாதத்துக்கு பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாத இறுதிக்குள் கனடா நான்கு மில்லியன் பைசரின் தடுப்பூசிகளைப் பெற முடியும் என அரசாங்கம் உறுதியளித்தது.

எனினும் பல மாகாண முதல்வர்களிடம் இருந்து வெளியான தகவல்களின் பிரகாரம் 3.5 மில்லியன் தடுப்பூசிகளையே கனடா மார்ச்சுக்குள் பெறும் என தெரியவருகிறது.

பைசர் தனது தடுப்பூசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மார்ச் மாதத்தில் கனடா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பைசர் தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் இருந்தபோதிலும் ஜூன் மாதத்திற்குள் கனடாவுக்கு சுமார் 20 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும் என கனடாவின் தடுப்பூசி விநியோகத் திட்டத்தை நெறிப்படுத்தும் ஜெனரல் டேனி ஃபோர்டின் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் கனடா மேலும் நான்கு மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெறும் எனவும் போர்டின் நம்பிக்கை வெளியிட்டார்.

கனடாவுக்கு இதுவரை 11 இலட்சத்து 22 ஆயிரத்து 450 மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போட விரும்பும் அனைவருக்கும் போதுமான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெறுவதற்கான இலக்கை கனடா நிர்ணயித்துள்ளது. ஆனால் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் இந்த இலக்கை அடைவதில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

கனடாவில் பல மாகாணங்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட தங்களுக்குக் கிடைத்த அனைத்து தடுப்பூசிகளையும் பயன்படுத்தியுள்ளன. இந்நிலையில் தடுப்பூசித் திட்டங்களை பல மாகாணங்கள் தாமதப்படுத்தி வருகின்றன.

தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நீண்டகால பராமரிப்பு மைய ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டங்களை இடைநிறுத்துவதாக ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்ததுள்ளது.

இதுவரை தமக்குக் கிடைத்த அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிட்டதாக சஸ்காட்செவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதே நேரத்தில் கியூபெக் மாகாணத்துக்குக் கிடைத்த 90 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த மாகாண அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.