Reading Time: < 1 minute

கனடாவில் சில நிமிடங்கள் இடைவெளியில் காதலன் மற்றும் காதலியின் கார்கள் களவாடப்பட்டுள்ளன.

கெவிட் நய்முட்ரா என்பவரின் வாகனம் களவாடப்பட்டுள்ளதுடன் அவரது காதலியான பாய்ஜீ சியாச்சாவின் வாகனமும் களவாடப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட காதலின் காரைப் பயன்படுத்தி காதலியின் காரைக் களவாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோ மாகாணத்தின் லண்டன் பகுதியில் இவ்வாறு கார்கள் களவாடப்பட்டுள்ளன.

முதல் கார் காணாமல் போனபோதே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது வாகனத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

காதலனின் காரில் காதலியின் கார் சாவியொன்று மேலதிகமாக வைக்கப்பட்டிருந்தது எனவும் அதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் மற்றைய காரையும் திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2020ம் ஆண்டு வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு காதலி கார் வாங்கியுள்ளதுடன், காதலன் கடந்த ஜுலை மாதம் வாகனம் கொள்வனவு செய்துள்ளார்.

வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.