கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களில் பலர், அங்கு பார்க்கும் பகுதி நேர வேலை மூலம் வரும் வருவாயை வைத்துத்தான் தங்கள் செலவுகளை கவனித்துக்கொள்கிறார்கள்.
இதற்கு முன், சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றுக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதி என்னும் கட்டுப்பாடு இருந்தது.
கனடா முழுவதும் பணியாளர் பற்றாக்குறை நிலவியதால், 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதாக பெடரல் அரசு அறிவித்தது. அதாவது, சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த அனுமதி, அதாவது, சர்வதேச மாணவர்கள் 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் வேலை பார்க்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட விதி, 2023 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆகவே, இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் அடுத்து என்ன செய்வோம் என இப்போதே கவலைப்படத் துவங்கிவிட்டார்கள்.
மெமோரியல் பல்கலையில் வர்த்தகம் பயில்கிறார் இஷாக் (Ishak Ibtida) என்னும் சர்வதேச மாணவர். சர்வதேச மாணவர்கள் 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் வேலை பார்க்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட விதி முடிவுக்கு வருவதால், தான் தற்போது நாளொன்றிற்கு பல மணி நேரம் வேலை செய்யும் நிறுவனத்தால் இனி தனக்கு வேலை தரமுடியாது என்கிறார் அவர்.
அத்துடன், வெறும் 20 மணி நேரம் தான் வேலை பார்ப்பதால் கிடைக்கும் வருவாய், தனது அறை வாடகைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கூறும் இஷாக், அப்படியானால், மளிகை மற்றும் பிற செலவுகளுக்கு நான் என்ன செய்வேன் என்கிறார்.
ஆக, கனடாவுக்கு கல்வி கற்க வந்த நான், அடுத்த மாதத்திலிருந்து வருவாய்க்கு என்ன செய்வது என்ற கவலை உருவாகிவிட்டதால், படிப்பிலும் கவனம் செலுத்தமுடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கிறார் அவர்.
ஒன்றில் கனடா சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முதலான கட்டணங்களைக் குறைக்கவேண்டும், அல்லது இப்படி, இவ்வளவு நேரம்தான் வேலை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டையாவது நீக்கவேண்டும், இந்த 20 மணி நேர வேலை அனுமதி போதாது என்கிறார் இஷாக்.