Reading Time: < 1 minute

கனடாவில் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் தென் சிம்கோ பகுதியின் இன்ஸிபில் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சயிட் வீதி மற்றும் 9ம் ஒழுங்கை பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

23 வயதான நபர் ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பேரே பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்றைய பொலிஸ் உத்தியோகத்தர் றொரன்டோ வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் வேதனை அளிப்பதாகவும் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகவும் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றிய ஏனைய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.