கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தொற்று நோயாளர் தொகை ஒரு மில்லியனைக் கடந்து அதிகரித்தது.
கனடாவில் நேற்று 6,937 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மொத்த தொற்று நோயாளர் தொகை 10 இலட்சம் என்ற கடுமையான மைல்கல்லை எட்டியது.
கனடா முழுவதும் தற்போது 57,022 பேர் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். 9 இலட்சத்து 21 ஆயிரத்து 459 பேர் தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். 23,050 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி கடந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் திகதி ரொரண்டோ – சன்னிபிரூக் சுகாதார அறிவியல் மையத்தில் உறுதிப்படுத்தப்பட்டார்.
கனடாவில் முதல் தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தின் பின்னர் மார்ச் -11 அன்று உலக சுகாதார அமைப்பு கொரோனாவை உலகம் பெருந்தொற்றாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானபோது சா்வதேச அளவில் 126,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கொரோனாவை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த 2021 மார்ச் 11 அன்று கனடாவில் 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இப்போது கனடா தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் போராடி வருகிறது. ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்கள் தொற்று நோயால் கடுமையாக பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன.
ஒன்ராறியோ
ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை 3,009 கோவிட் -19 தொற்று நோயாளர்களும் வெள்ளிக்கிழமை 3,089 தொற்று நோயாளர்களும் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டனர்.
தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்து வருவதை அடுத்து நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் ஒரு மாத கால முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னரைப் போன்று முழுமையாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (emergency brake) இந்த புதிய முடக்க நிலை அமையும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
புதிய சமூக முடக்கல் அறிவித்தலில் பிரகாரம் உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவைகள் தடை செய்யப்படும். அத்துடன், ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக அமுலாகும்.
புதிய முடக்க நடைமுறையின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் கடுமையான திறன் வரம்புகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சில்லறை கடைகள் 50 சதவீத திறன் வரம்பில் இயங்க முடியும், அதே நேரத்தில் பிற கடைகள் மற்றும் சில்லறை வியாபார நடவடிக்கைகள் 25 சதவீத திறனுடன் செயல்பட முடியும். தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் ஜிம்கள் மூடப்படும்.
ஒன்ராரியோ மக்கள் யாரும் தங்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் ஒன்றுகூடுவது கட்டுப்படுத்தப்படும். வெளியே 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை வருகிறது. 5 பேருக்கு குறைவானவர்கள் அவசிய தேவை கருதி ஒன்றுகூடினால் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அத்தியாவசிய தேவை தவிர, அநாவசியமான பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஒன்ராறியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து வாங்குதல் மருத்துவ ஆலேசானை பெறுதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக ஆதரவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே வீட்டுக்கு வெளியே பயணம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
கியூபெக்
கியூபெக் மாகாணத்திலும் தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகளவில் பதிவாகி வருகிறது. நேற்று சனிக்கிழமை அங்கு 1,282 கோவிட் தொற்று நோயாளர்களும் வெள்ளிக்கிழமை 1,300 தொற்று நோயாளர்களும் பதிவாகினர்.
பிரிட்டிஷ் கொலம்பியா
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை 1,072 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமை 1,018 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 102,970 ஆக அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டன.
சில பிராந்தியங்களில் உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவைள் தடை செய்யப்பட்டன. தனிப்பட்ட பராமரிப்பு சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மூன்று மாகாணங்களிலும் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் கடுமையான கோவிட்19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.