Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள தாவாசன் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதிக்குட்பட்ட வர்த்தக வளாகத்திற்கு வெளியே, வாகனம் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் ‘மருத்துவ அவசர நிலை’ காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உண்மையை அறிதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தின விழிப்புணர்வு நடைபயணம் இடம்பெற்ற பகுதியிலேயே புதன்கிழமை காலை 10:30 மணியளவில் ‘தாவாசன் மில்ஸ்’ வர்த்தகத் தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்துக்கும் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என டெல்டா பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து 12 தரைவழி அவசர ஆம்புலன்ஸ்களும், 2 வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சையளித்தன.

இந்த விபத்தில் உயிரிழந்த இருவரும் தாவாசன் ஃபர்ஸ்ட் நேஷன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர்கள் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே துயரம் நிறைந்த ஒரு நாளில், இத்தகைய அதிர்ச்சிகரமான விபத்தில் அன்பிற்குரிய இரு மூத்த தலைவர்களை இழந்தது பெரும் மனவேதனையை அளிக்கிறது என பிரதமர் கார்னி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான காணொளிகள் அல்லது தகவல்கள் வைத்துள்ள பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.