Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூா்வ தரவுகளின்படி அறிவிக்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் கனடாவில் இதுவரை 26,230 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கனடாவின் ரோயல் சொசைட்டி (Royal Society of Canada) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோயால் இறந்த கனேடியர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையில் காட்டப்பட்டுள்ளதை விட இரு மடங்காக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையில் பேரழிவு, ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன என ரொரண்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சியாளரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான தாரா மோரியார்டி தெரிவித்தார்.

உத்தியோகபூா்வமாக அறிக்கையிடப்படாத பெரும்பாலான கொரோனா மரணங்கள் வீடுகளில் இடம்பெற்றவையாக இருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணக்கிடப்படாத இறப்புக்களின் தொகை மாகாணங்களுக்கு இடையே வேறுபடுகிறது.

கியூபெக்கிற்கு வெளியே உள்ள எல்லா பிராந்தியங்களிலும் கோவிட் இறப்பு எண்ணிக்கை நாம் நினைப்பதை விட இரு மடங்காக இருக்கும். இது அநேகமாக துல்லியமான கணிப்பு என தாரா மோரியார்டி தெரிவித்துள்ளார்.

கனடாவில் நீண்டகால பராமரிப்பு மையங்களில் பதிவான இறப்புகளைக் கண்காணிக்கும் போது ஏதோ முடக்கப்பட்டிருப்பதை உணரத் தொடங்கினேன். கனடாவில் தொற்று நோயாளர் தொகையுடன் இறப்பு விகிதங்களை கவனிக்கும்போது ஏதோ குறைபாடு இருப்பதாகத் தோன்றியது.

காலப்போக்கில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிக மரணங்கள் பதிவாவதை உணர ஆரம்பித்தேன். சில கோவிட் 19 மரணங்களை உறுதிப்படுத்த ஒரு மாதத்துக்கும் மேலும் கூட ஆனதையும் கவனித்தேன் என தொற்று நோய் ஆராய்ச்சியாளரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான தாரா மோரியார்டி தெரிவித்தார்.

கனடாவில் பதிவான கோவிட் 19 இறப்புகளில் 80 விகிதம் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்ததாக உத்தியோகபூா்வ தரவு கூறுகிறது. ஆனால் அது தவறு என்று அறிக்கை கூறுகிறது. மற்ற நாடுகளைப் போலவே எங்கள் இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு நீண்டகால பராமரிப்புக்கு மையங்களுக்கு வெளியே நிகழ்ந்திருக்கலாம் என தாரா மோரியார்டி குறிப்பிடுகிறார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டது தெரியாமலேயே மக்கள் வீடுகளில் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு தெளிவுபடுத்துகிறது என அவா் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் இடம்பெற்ற இறுதிச் சடங்குகள் குறித்து ஆராய்ந்தபோது வழமைக்கு மாறாக வீடுகளில் அதிக இறப்புக்கள் பதிவானமை தெரியவந்தது. முன்னைய ஆண்டுகளை விட 63 வீத அதிகப்படியான இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ளன.

இவை வெறும் எண்கள் அல்ல. அவை எங்கள் மக்களின் உயிர்கள். இவை தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய மரணங்கள் எனவும் தாரா மோரியார்டி தெரிவித்துள்ளார்.