கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயல்பாடுகள் காணப்படுகின்றன என்று கனடா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
சீக்கியர்களுக்கான தனி நாடாக “காலிஸ்தான்” உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 1980களில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 1990களில் இந்தியாவில் கடுமையாக ஒடுக்கப்பட்டது. இருப்பினும், கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் சில புலம்பெயர்ந்த சீக்கியக் குழுக்களிடையே இந்த இயக்கம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனடாவில் அதிகளவில் வாழும் சீக்கிய சமூகத்தின் சில பிரிவுகள், காலிஸ்தான் ஆதரவு பிரசாரங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
2025ஆம் ஆண்டுக்கான தனது பொது அறிக்கையில், கனடாவில் உள்ள சில காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், நாட்டின் மண்ணை பயன்படுத்தி வன்முறை தொடர்பான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவை குறிவைத்து நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நிதிகள், வன்முறைச் செயல்பாடுகளுக்கு மாற்றி விடப்படுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், சில தீவிரவாத தொடர்புடைய நபர்கள், கனடாவின் அரசு மற்றும் சமூக நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவற்றை தங்கள் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதோடு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.




