கனடாவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் சீரமைப்பு பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட பூர்வக்குடி மக்களின் கத்தி ஒன்று, தற்போது அவர்களிடமே ஒப்படக்கப்பட உள்ளது.
குறித்த கத்தியானது ஒட்டாவா பகுதியில் குடியிருந்த பூர்வக்குடி மக்கள் பயன்படுத்தி வந்தது என கண்டறியப்பட்டது. சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான அந்த கத்தியானது தற்போது பூர்வக்குடி மக்களிடமே ஒப்படைக்க கனடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது.
கல்லாலான குறித்த கத்தியானது Pikwakanagan பூர்வக்குடி மக்களுக்கும் Zibi Anishinabeg பூர்வக்குடி மக்களுக்கும் உரிமை கொண்டது என கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டி முடித்து திறப்புவிழாவுக்கு 2030 வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிய வந்துள்ளது. அதுவரையில் குறித்த கத்தியானது பூர்வக்குடி சமூகங்களிலும், பள்ளிகளிலும் காட்சிக்கு வைக்கப்படும்.
இதன் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு, விழா ஒன்றில் உரிய பூர்வக்குடி மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒட்டாவா பகுதியானது பூர்வக்குடி மக்களின் மிக முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.