கோவிட்19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு கனடாவில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட சராசரியை விட 13,798 அதிகப்படியான இறப்புகள் பதிவாகியுள்ளதாக கனடா புள்ளிவிவரவியல் பிரிவு
நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை கனடாவில் மொத்தம் 296,373 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட சராசரி வருடாந்த இறப்பு வீதத்தை விட 5 வீதம் அதிகமாகும் என கனடா புள்ளிவிவரவியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் உத்தேச சராசரியை விட 4,200 மரணங்கள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஏப்ரல் 25 முதல் மே 2-ஆம் திகதி ஒரு வாரத்தில் 1,300 என்ற அடிப்படையில் அதிக இறப்புக்கள் பதிவாகின.
வயது அடிப்படையில் கடந்த ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனேடியர்களிடையே அதிக இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இதில் கோவிட் தொற்று நோய் பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலையுதிர்காலத்தில் 65 வயதிற்குட்பட்ட நபர்களிடையிலான இறப்புக்களும் விகிதாசார அடிப்படையில் அதிகரித்துள்ளன. இக்காலத்தில் 65 வயதுக்குட்பட்டோரிடையிலான இறப்பு 35 வீதம் அதிகரித்துள்ளது.
இது வசந்த காலத்தில் இந்த வயதினரிடையே பதிவான இறப்புக்களை விட 20 வீதம் அதிகமாகும். இந்த இறப்பு வீத அதிகரிப்பு முழுமையாக தொற்று நோயால் ஏற்படவில்லை என்றாலும் தொற்று நோயின் தாக்கங்களும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கனடா புள்ளிவிபரவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் உத்தேச சராசரியை விட 5,000 இறப்புக்கள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. ஒன்ராறியோவில் சுமார் 4,500 அதிகப்படியாக இறப்புக்கள் பதிவாகின எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.