கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி ஒன்றாரியோவின் லின்ட்ஸே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையுடன் இருந்த அவரது தந்தையுடன் பொலிஸார் மோதிய போது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
33 வயதான நபர் தனது மகனை கடத்தியதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன் போது பொலிஸாருக்கும் குழந்தையின் தந்தைக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவானதாகவும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது குறித்த நபரின் கையில் இருந்த ஒன்றரை வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபரும் ஒரு வார காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
ஒன்றரை வயதான ஜேம்சன் ஷாபிரோ என்ற சிறுவனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தான். இந்த சம்பவம் தொடர்பில் 21 மாத கால நீண்ட விசாரணைகளின் பின்னர், பொலிஸார் மீது விசேட விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாதன் வென்டர்ஹெய்டன், கெனத் பெங்காலே மற்றும் கிரேசன் கப்புஸ் ஆகிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே சிறுவன் உயிரிழந்தான் என விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.