கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனடா பொது சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், ஆல்பெர்ட்டாவில் இருந்து 19 பேர், சாஸ்கத்சிவானில் இருந்து 3 பேர் மற்றும் யுகோன் பகுதியில் இருந்து 2 பேர் என மொத்தம் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து மாகாண மற்றும் பிரதேச பொது சுகாதார துறையினருடன் இணைந்து, தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு பணியை உறுதி செய்து வருகிறோம் என்றும் அந்த கழகம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, இதுவரை 80 ஆயிரத்திற்கும் கூடுதலான இம்வாம்யூன் தடுப்பூசிகளை அந்த பகுதிகளுக்கு வழங்கி உள்ளது. பரிசோதனைகளுக்கான பொருட்களையும் வழங்கி ஆதரவளித்து வருகிறது.
அதேவேளை முதன் முதலில் குரங்கு அம்மை பாதிப்புகள் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்பட்ட நிலையில், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்பட 50க்கும் கூடுதலான நாடுகளில் இந்த பாதிப்புகள் பரவி உள்ளன.
அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சர்வதேச அளவில் 31 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 12 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
அதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூலையில் குரங்கம்மை தொற்றினை பொது சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.