பொருட்கள் மீதான விலையுயர்வு சரிவடைந்து வந்தாலும், கனடாவில் உணவு பண்டங்களுக்கான விலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி மாதம் 5.2 சதவீதமாக பதிவான நிலையில் ஜனவரியில் 5.9 சதவீதம் என பதிவாகியிருந்தது. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது.
பணவீக்கம் சரிவடைந்து காணப்பட்டாலும், அதன் தாக்கம் பொருட்களின் விலையில் பிரதிபலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த பிப்ரவரியில் உணவு பண்டங்களின் விலை 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாஸ்தா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 23.1 சதவீதம் அதிகரித்துள்ளது. பழச்சாறு வகைகளின் விலை 5.2 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆரஞ்சு பழச்சாறு விலை அதிகரித்துள்ளது. ஆனால் ஆரஞ்சு பழங்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.1 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதம் என்றே அதிகரித்துள்ளது.
மாமிச வகைகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீதம் என அதிகரித்துள்ளது. மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளின் விலையில் 1% மட்டுமே அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சியை பொருத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.