கனடாவில் இறந்த திமிங்கிலம் ஒன்றை உட்கொண்ட நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய கடற் கரையில் இந்த திமிங்கிலம் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.
கடந்த சில மாதங்களில் இவ்வாறு நான்கு திமிங்கிலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறந்த திமிங்கிலத்தின் இறைச்சியை உட்கொண்ட சில நாய்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளன.
காட்டு விலங்குகள் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் காணப்படும் போது அவற்றை தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ உசிதமானதல்ல என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் கரையொதுங்கும் திமிங்கிலத்தை உட்கொண்டால் வாந்தி பேதி, முகத்தில் பக்கவாதம், தொண்டை நோவு உள்ளிட்ட பல நோய்கள் மனிதருக்கும் ஏற்படும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அழுகிய நிலையில் உள்ள விலங்கினங்களை உட்கொள்வது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.