கனடாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான ஆளுநர் நாயகம் பதவிக்கு பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த மேரி சைமன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
கனடாவின் 30 -ஆவது ஆளுநர் நாயகமாக மேரி சைமன் பிரேரிக்கப்பட்டுள்ளதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவி நிலைக்கு நியமிக்கப்படும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார்.
இது ஒரு வரலாற்றுத் தருணம். கனடா சுதந்திர நாடாக உருவான 154 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடி சமூகத்தவர் ஒருவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்படுகிறார். கனடா தொடர்ந்து முன்னேற ஆளுநர் நாயகம் மேரி சைமன் பணி உதவும். நாங்கள் அவருடன் இணைந்து அதற்கு வலுச் சோ்ப்போம் என பிரதமர் ட்ரூடோ கூறினார்.
பிரதமர் ட்ரூடோவின் பரிந்துரையின் பேரில் இரண்டாம் எலிசபெத் மகாராணி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் விரைவில் உத்தியோக பூா்வமாக கனடாவின் 30 -ஆவது ஆளுநர் நாயகமாக மேரி சைமன் பொறுப்பேற்பார் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.
கனடாவில் முன்னாள் பழங்குடியின பள்ளிகளில் அடையாளப்படுத்தப்படாத பல நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டில் மிக முக்கிய பதவிநிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலத்தில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேரி சைமன் தெரிவித்தார்.
மனித நேயத்தை மதித்து, ஒருவருக்கொருவர் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டால் கனடாவை உயர்ந்த நிலைக்கு நாங்கள் இட்டுச் செல்ல முடியும் என அவர் கூறினார்.
தொழில்முறை சிரேஷ்ட சட்டத்தரணியான மேரி சைமன், வடக்கு கியூபெக்கில் உள்ள நுனாவிக் நகரிலிருந்தவாறு நீண்ட காலமாக பழங்குடி சமூக, கலாசார உரிமைகளுக்காக போராடி வருகிறார். தேசிய இனுக் கல்வி குழுவின் தலைவராகவும் அவா் பணியாற்றினார்.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA ), கனடாவின் நில உரிமைக் கொள்கையை அமுலாக்க விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் அவர் பல ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கனேடிய தூதராக இருந்த முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் மேரி சைமனுக்கு உண்டு. டென்மார்க்கிற்கான கனேடிய தூதராக அவர் பணியாற்றியுள்ளார்.