கனடா பொதுமன்றத் தேர்தல் பரபரப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை கனேடியர்கள் 44 பாராளுமன்றத்தை தெரிவு செய்யவுள்ளதுடன், நாட்டின் 24 ஆவது பிரதமரையும் தோ்ந்தெடுக்கவுள்ளனர்.
இம்முறை கனேடிய தோ்தல் பிரச்சாரத்தில் கொவிட் 19 தொற்று நோய் நெருக்கடி மற்றும் மீட்பு விவகாரம் முன்னிலை பெற்றிருந்தது. அத்துடன், வழமைபோன்று கால நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான விவகாரங்களும் முன்னிலை பெற்றிருந்தன.
தோ்தலுக்கு முன்னராக கருத்துக் கணிப்புக்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், எரின் ஓ டூல் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான, நெருக்கமாக போட்டி நிலவுவதாக கூறுகின்றன.
அதே நேரத்தில் ஜக்மீத் சிங்கின் தலைமையிலான என்.டி.பி. 20 வீத ஆதரவுடன் போட்டியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கியூபெக் தேசியவாத கட்சியான பிளாக் கியூபெகோயிஸ், கனடாவின் பசுமை கட்சி மற்றும் தீவிர வலதுசாரி கனடா மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் கனடா அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஆறு முக்கிய கட்சிகளாக இந்தத் தோ்தலை எதிர்கொள்கின்றன.
ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் தற்போதைய மற்றும் 23 வது பிரதமராக உள்ளார்.
ஒக்டோபர் 2019 இல் நடந்த கூட்டாட்சி தேர்தலில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 157 இடங்களைக் கொண்ட சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. இதன்மூலம் 48 வயதான ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக உள்ளார். 2013 -இல் லிபரல் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ட்ரூடோ, 2015 -இல் முதல் முறையாக பிரதமரானார். அந்த ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மையை வென்றது. இதற்கு முன்னர் ஸ்டீபன் ஹார்பரின் கீழான கன்சா்வேடிவ் கட்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் ஆட்சியில் இருந்தது. கோவிட் -19 தொற்றுநோயை தனது அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார மீட்பு திட்டங்களால் பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் முன்னதாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து ட்ரூடோ தோ்தலை எதிர்கொள்கிறார்.
ஆனால் பிரச்சாரங்களின்போது கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்ப்போர் மத்தியில் இருந்து சவால்களை எதிர்கொண்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 78 பில்லியன் கனேடிய டொலர்களை ($ 62 பில்லியன்) புதிய செலவினங்களுக்கான ஒதுக்கடு செய்ய லிபரல் கட்சி பிரச்சாரங்களில் உறுதியளித்துள்ளது. அடுத்த அரசாங்கத்தை அமைத்தால் அனைத்து கனேடியர்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன், கட்டாய தடுப்பூசி முறைமையை செயற்படுத்த விரும்பும் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு 1 பில்லியன் டொலா் நிதியுதவி வழங்க அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
எரின் ஓ டூல்
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக எரின் ஓ டூலே உள்ளார். 2019 தேர்தல்களில் கன்சர்வேடிவ்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்போதைய தலைவர் ஆண்ட்ரூ ஷீயர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து 2020 இல் எரின் ஓ டூல் கட்சித் தலைமையை பொறுப்பேற்றார்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்த இலக்குகளை 2030 க்குள் அடைய கன்சர்வேடிவ்கள் உறுதியளித்துள்ளனர்.
2005 இருந்தததை விட கரியமில வாயு வெளியேற்றத்தை இக்காலப்பகுதிக்குள் சுமார் 30 வீதம் குறைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 2030 க்குள் விற்பனைக்கு வரும் கார்கள் உள்ளிட்ட 30 வீத இலகுரக வாகனங்கங்களையும் பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வு வாகனங்களாக மாற்ற அவா்கள் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், பில்லியன் கணக்கான புதிய முதலீடுகளுக்கும் கன்சர்வேடிவ்கள் உறுதியளித்தனர். தொற்று நோய் பொருளாதார மீட்பு வளர்ச்சித் திட்டங்களையும் அவா்கள் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கனேடிய மாகாணங்களுடன் இணைந்து நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தப் போவதாக எரின் ஓ டூல் கூறினார். ஆனால் கூட்டாட்சி பணியாளர்களுக்காக கட்டாய தடுப்பூசி திட்டத்தை அவா் எதிர்த்து வருகிறார். கன்சர்வேடிவ் வேட்பாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி திட்டத்தை அவர் முன்னிறுத்தவில்லை. இதேவேளை, சுமார் 20,000 ஆப்கானியர்களை குடியேற்றுவதற்கான லிபரல் வாக்குறுதியை ஏற்பதாகவும் தங்கள் ஆட்சி அமைந்தால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.
ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங் கனடாவின் இடதுசாரி அரசியல் அமைப்பான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஆவார். இக்கட்சி பாராளுமன்றத்தில் நான்காவது அதிக இடங்களைக் கொண்டுள்ளது. சீக்கியரான 42 வயதான ஜக்மீத் சிங், 2017 இல் கட்சித் தலைமையை வென்று கனடாவில் ஒரு கூட்டாட்சி கட்சியின் முதல் சிறுபான்மைத் தலைவராக ஆனார். 2011, 2015 தேர்தலில் வலுவான ஆதரவைக் கொண்டிருந்த இக்கட்சிக்கு 2019 தோ்தலில் ஏமாற்றமளிக்கும் முடிவுகளே கிடைத்தன. 2019இல் 24 இடங்களை மட்டுமே இக்கட்சி பெற்றது. முன்னைய பல தொகுதிகளை இத்தோ்தலில் இழந்து பின்னடைவைச் சந்தித்தது. புதிய ஜனநாயகக் கட்சிகளின் பெரும்பாலான ஆதரவு தளங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ராறியோவில் உள்ளன.
அனைத்து கூட்டாட்சித் தொழிலாளர்களுக்கும் $ 20 குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 10 நாட்கள் ஊதியத்துடனாக சுகயீன விடுப்பை வழங்க என்.டி.பி. தோ்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்துள்ளது.
காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 50 சதவீதத்திற்கு கீழ் குறைப்பதாகவும், சமூகங்களில் “பசுமை உள்கட்டமைப்பை” உருவாக்குவோம் எனவும் கட்சி வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
யெவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட்
யெவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட்டின் கீழ், கியூபெகோயிஸ் நாடாளுமன்றத்தில் தனது இடங்களை 10 இல் இருந்து 32 ஆக கடந்த 2019 கூட்டாட்சி தேர்தலில் அதிகரித்தது.
பிரெஞ்சு பேசும் கியூபெக் மாகாணத்தின் நலன்களை பிரதானமாக முன்னிறுத்தி கியூபெகோயிஸ் செயற்பட்டு வருகிறது.
கியூபெக்கில் புகுடியேறுபவர்களுக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக பிரெஞ்சு மொழியை கற்றுத் தேறவேண்டும் என கியூபெகோயிஸ் வலியுறுத்தி வருகிறது.
காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்த்துப் போராடும் வகையில் எரிபொருள் மானியங்களை நிறுத்துமாறு கட்சி அழைப்பு விடுத்தது. அபிவிருத்திப் பணிகளில் பசுமைத் திட்டங்களை முன்னிறுத்துமாறும் அக்கட்சி வலியுறுத்தி வருகிது.
அன்னமி போல்
பசுமைக் கட்சியின் தலைவராக அன்னமி போல் உள்ளார். கனடாவில் ஒரு கூட்டாட்சி கட்சியை வழிநடத்தும் முதல் கறுப்பின கனடிய-யூத பெண்ணாக அவா் உள்ளார். 48 வயதான அவர் கடந்த ஆண்டு கட்சி தலைமையை வென்றார்.
ஒக்டோபர் 2020 இல் டொராண்டோ மையத்தில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரே கூட்டாட்சி கட்சித் தலைவராக அவா் உள்ளார்.
2019கூட்டாட்சி தோ்தலில் இக்கட்சி மூன்று இடங்களை வென்றது.
சுற்றுச்சூழலை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு இக்கட்சி செயற்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 60 சதவிகிதம் குறைக்க இக்கட்சி விரும்புகிறது. 2030 க்குள் அனைத்து எரிபொருளில் இயங்கும் இயந்திர பயணிகள் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிப்பதை இக்கட்சி முன்னிறுத்தி வருகிறது.
மாக்சிம் பெர்னியர்
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி தலைமைப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு, கனடாவின் தீவிர வலதுசாரி மக்கள் கட்சியை மாக்சிம் பெர்னியர் தொடங்கினார்.
2019 வரையான இரண்டு பொதுத் தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார். நாடாளுமன்றில் ஒரு பிரதிநிதியையும் கொண்டிருக்காத இக்கட்சி 2019 இல் 1.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்தத் தோ்தலில் நாடாளுமன்றில் ஒரு ஆசனத்தை வெல்வதற்கான சிறிய வாய்ப்பை இக்கட்சி கொண்டுள்ளது.