கனடாவில் கடந்த நான்கு தசாப்தங்களாக பிரசூரமாகிக் கொண்டிருந்த சீனப் பத்திரிகையொன்றின் அச்சுப் பணிகள் நிறுத்தப்பட உள்ளது.
இந்த மாதம் முதல் குறித்த சீனப் பத்திரிகை அச்சு வடிவில் வெளிவாராது என டிஜிட்டல் பிரதியாக மட்டுமே பிரசூரமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்திரிகையில் பணியாற்றி வந்த 83 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். சிங் டாவோ (Sing Tao) என்ற சீன மொழிப் பத்திரிகையே இவ்வாறு அச்சு வடிவத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
றொரன்டோ, கல்கரி, வான்கூவார் போன்ற பகுதிகளில் பிரசூரமாகி வரும் இந்த பத்திரிகை எதிர்வரும் 28ம் திகதியுடன் இணைய வழி பிரதியாக மட்டும் பிரசூராக உள்ளது.
இந்த பத்திரிகையை படிக்கும் சிரேஸ்ட பிரஜைகளில் பலர் தற்பொழுது ஸ்மார்ட் பேசிகளை பயன்படுத்தக் கூடியவர்கள் எனவும் இதனால் அச்சுப் பிரதி வெளியிடுவதனை நிறுத்திக்கொள்வதாக பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வாறு பத்திரிகை நிறுவனம் அச்சுப் பிரதிகளை நிறுத்திக் கொண்டதனால் தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பினை இழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.