Reading Time: < 1 minute

அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பனவற்றை கடத்திய கும்பலை ஒன்றாரியோ போலீசார் கைது செய்துள்ளனர்.

கொக்கேய்ன், கண்டேனேல் ஆகிய போதை பொருட்களையும் துப்பாக்கிகளையும் கனடாவிற்குள் கடத்திய கும்பல் ஒன்றையே இவ்வாறு யோர்க் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் ஆயுதங்கள் கடத்தும் கும்பல் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொண்டு இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த பத்து மாதங்களாக இந்த குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 27 கைத்துப்பாக்கிகளும் 300 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு நூதன முறைமைகளை பயன்படுத்தி இந்த குற்றவாளி கும்பல் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை போலீஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 1.3 மில்லியன் டாலர் பெறுமதியான போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதை பொருட்களில் ஒன்பது கிலோகிராம் கொக்கேய்ன் போதை பொருளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.