கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனை தேவையில்லை!
ஜனவரி நடுப்பகுதியில் இருந்து கொவிட்-19 இன் புதிய தொற்றுகள் குறைந்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறுகையில், ‘தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவைக் காட்ட வேண்டிய தேவை ஏப்ரல் 1 முதல் இனி தேவைப்படாது.
கனடாவின் அதிக தடுப்பூசி விPம் மற்றும் எல்லையில் குறைவான வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டதால் புதிய, மிகவும் மென்மையான எல்லைக் கொள்கை சாத்தியமாகும்.
கடந்த சில வாரங்களாக கனடாவிற்குள் நுழையும் பயணிகளின் நேர்மறை வீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவைக் கண்டுள்ளோம்.
உள்வரும் சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குச் செல்ல இன்னும் தடுப்பூசி போட வேண்டும், மேலும் அனைத்து உள்வரும் பயணிகளும் தங்கள் விபரங்களை அரைவ்கேன் பயன்பாட்டில் பதிவேற்ற வேண்டும்.
விமான நிலையங்களில் நேர்மறை வீதம் ஜனவரியில் 10 சதவீதமாக இருந்தபோதிலும், அது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது’ என கூறினார்.
இதனிடையே, இது ஒரு பெரிய மாற்றமாகும், இது எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்கும் என ஹெய்ன்ஸ் சுற்றுலா இயக்குனர் ஸ்டீவன் ஆச் தெரிவித்துள்ளார்.
தற்போது, கனடாவிற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் ஆன்டிஜென் சோதனையின் எதிர்மறையான முடிவை நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த முடிவு தற்போது மாற்றம் பெறுகின்றது.
கனேடியப் பயணிகளின் பற்றாக்குறையால் சில உள்ளூர் சில்லறை வணிகங்கள் வணிகத்தில் 30 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டிருந்த நிலையில், பேரழிவு தரும் இழப்புகளைக் கண்டிருந்த சில எல்லை வணிகங்களுக்கு இது மிக மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.