கனடாவில் மிக அதிக வயதான பெண்ணான ஃபிலிஸ் ரிட்வே தனது 114-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் ரொரண்டோவில் தனது முதல் கோவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
1907 மார்ச் 10, இல் பிறந்த ஃபிலிஸ் ரிட்வே பைசர் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை ரொரண்டோ சன்னிபிரூக் மருத்துவமனை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டபின்னர் கருத்து வெளியிட்ட ஃபிலிஸ் ரிட்வே, “இது எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு” என்று கூறினார்.
இந்நிலையில் இந்த ருவிட்டுக்கு பதிலளித்துள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”இது மனதைத் தொடும் தருணம். இந்த நல்ல செய்தியை எங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
“மேலும் ஃபிலிஸ் ரிட்வேக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்தாளை இந்த வழியில் நீங்கள் கொண்டாடியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ” எனவும் பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தின் தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாத தொடக்கத்திலிருந்து 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.
ஒன்ராறியோ இதுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமான கோவிட்19 தடுப்பூசிகளை போட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.