கனடாவின் பிராம்டனில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதில், தப்பிக்க முடியாமல் உடல் கருகி பலியான மூன்று இளம் சகோதரர்கள் தொடர்பில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிராம்டனில் வியாழக்கிழமை குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதில், இளம் வயது சகோதரர்கள் மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். ஆனால் மூவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது சிறுவர்களின் தாயார் குடியிருப்பில் இல்லை என தெரிய வந்துள்ளது. தமது இளைய மகளை பகல் நேர காப்பகத்தில் சேர்ப்பிக்க அவர் சென்றிருந்ததாகவும், திரும்பி வரும்போது அவரது குடியிருப்பு தீப்பற்றி எரிவதை அவர் காண நேர்ந்துள்ளது.
இதனிடையே, அப்பகுதி பொதுமக்களே துணிச்சலுடன் காப்பாற்ற போராடியதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளிக்கிழமை பிராம்டன் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை மோசமான சம்பவம் என குறிப்பிட்டுள்ள பீல் பொலிசார், இச்சம்பவம் குடும்பத்தினரின் அலட்சியம் என்ற கோணத்தில் விசாரிப்பதாக இல்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை பகல் 9.11 மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட பிராம்டன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.