கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விக்டோரியா கடற்கரையில் சரக்குக் கப்பலில் பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதிலிருந்த ரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் பல கடலுக்குள் வீழ்ந்துள்ளதால் சுற்றுச் சூழல் மாசு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
எத்தனை கொள்கலன்கள் கலலில் வீழ்ந்தன? என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை என கனேடிய கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிக்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
முதலில் 10 கொள்கலன்களுக்கு தீ பரவியது. பின்னர் 40 வரையான கொள்கலன்கள் தீப்பற்றி எரிந்தவாறு கடலுக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கலன்கள் கடலுக்குள் விழும் காட்சிகள் சா்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கடலில் வீழ்ந்த சில கொள்கலன்களின் உள்ள இடங்கள் ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. எனினும் விக்டோரியா கடலோரப் பகுதிகளில் காலநிலை மோசமாக உள்ளதால் அவற்றை மீட்கும் முயற்சிகள் உடனடிாக ஆரம்பிக்கப்படவில்லை.
இன்று திங்கட்கிழமை காலநிலை ஓரளவு சீராகும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் அதன் பின்னரே அவற்றை மீட்கும் பணிக் தொடங்கும் என கனேடிய கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிக்கெட் தெரிவித்தார்.
உள்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 11 மணியளவில் எம்.வி. ஜிம் கிங்ஸ்டன் (MV Zim Kingston) என்ற சரக்குக் கப்பல் விக்டோரியா கடற்பரப்பில் தீப்பற்றியது.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கனேடிய இராணுவத்தினர் விமானங்களுடன் களமிறங்கியுள்ளனர். மேலும் கடலில் கலந்துள்ள ஆபத்தான ராசாயனங்களைப் பாதுகாப்பாக பிரித்தெடுப்பதற்கான நிபுணர் குழுக்களும் அங்கு விரைந்துள்ளன.
இதேவேளை, கப்பலில் இருந்து 40 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை நேற்று ருவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் 52,000 கிலோவுக்கும் அதிகமான சுரங்கத் தொழிலில் பயன்படுத்தப்படும் சாந்தேட்ஸ் (xanthates) உள்ளிட்ட ரசாயனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை கடல் நீருடன் கலப்பதால் சூற்றுச் சூழல் மாசு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. ஜிம் கிங்ஸ்டன் கப்பல் வெள்ளிக்கிழமை ஜுவான் டி ஃபுகா ( Juan de Fuca) ஜலசந்திக்கு மேற்கே மோசமான காலநிலையை எதிர்கொண்டதாக அறிவித்த நிலையில் சனிக்கிழமை விக்டோறியா அருகே தீப்பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது.