கனடா முழுவதும் 72 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு Via Rail சேவை ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள் என்றே கூறப்படுகிறது.
அடுத்த வாரத்தில் 3 நாட்கள் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 2,400 ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஜூலை 11, திங்கட்கிழமை மதியம் 12:01 மணிக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், பராமரிப்புப் பணியாளர்கள், ஆன்-போர்டு சேவை பணியாளர்கள், சமையல்காரர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 99.4% பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக Via Rail சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இறுதிவரையில் உடன்பாடு ஒன்றை எட்ட பொறுமையுடன் காத்திருப்பதாகவும், அதிகா தரப்பி மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு தரப்பினரும் உடன்படிக்கைக்கு வர முடியாவிட்டால், வேலைநிறுத்தம் அறிவித்துள்ள காலத்திற்கு அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்படும் பயணிகள் தங்கள் முன்பதிவை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான முழுப் பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம் என Via Rail சேவை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.