Reading Time: < 1 minute

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையமொன்றில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்19 தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் அந்த இல்லத்தில் பல முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பராமரிப்பு மையங்களில் மற்றொரு கொத்தணித் தொற்று உருவாகும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அவசியம் என பிரிட்டிஷ் கொலம்பியா தலைமை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் போனி ஹென்றி எச்சரித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள – கொட்டன்வுட்ஸ் பராமரிப்பு மையத்தில் புதிய கொரோனா கொத்தணி தொற்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி போடப்பட்டபோதும் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவா் கூறினார்.

தொற்று நோயைத் தடுப்பதில் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். குறிப்பாக கடுமையான நோய்வாய்ப்படுவதில் இருந்தும் மரணங்களைத் தடுப்பதிலும் தடுப்பூசி உதவுகிறது. ஆனால் அதனைத்து நேரங்களிலும் தொற்று ஏற்படாது எனக் கருதமுடியாது எனவும் டாக்டர் போனி ஹென்றி தெரிவித்தார்.

எனவே, தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் முதியோர் பராமரிப்பு மையங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் அவா் கூறினார்.

கொட்டன்வுட்ஸ் பராமரிப்பு மையத்தில் இரண்டு ஊழியர்கள் மற்றும் 10 முதியவர்களுக்கு சமீபத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 221 நீண்டகால பராமரிப்பு படுக்கைகள் உள்ளன. இதனையடுத்து அங்கு தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை வரையான நிலவரப்படி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 333,327 சொட்டுகள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா தடுப்பூசி விநியோகத் திட்டத்தில் முதல் கட்டத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இப்போது 2 ஆம் கட்டத்தில், சுகாதார அதிகாரிகள், 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.