பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமரையும் நெதர்லாந்து பிரதமரையும் தனது இல்லத்தில் சந்திக்கிறார்.
உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்த ரஷ்யாவுக்கெதிராக கண்டனம் தெரிவிப்பது முதல், உக்ரைனுக்கு நடைமுறை உதவிகள் வழங்குவது வரையிலான விடயங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
அவ்வகையில், முதலாவதாக, இன்று, கனேடிய மற்றும் நெதர்லாந்து பிரதமர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிரதமர்கள், இருவர் இருவராகவும், பிறகு மூவரும் இணைந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர்.
ரஷ்யாவின் முரட்டுத்தனமான மற்றும் சட்ட விரோதமான தாக்குதல் துவங்கிய நேரம் முதல், பயப்படாமல் ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலகம் ஒன்றிணைந்து நிற்பதை நாம் காணமுடிகிறது என்றார் போரிஸ் ஜான்சன்.
தேவையிலிருப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் முதல் மருத்துவ உதவி வரையில் பிரித்தானிய உதவி ஏற்கனவே சென்றடைந்து வரும் நிலையில், புடினால் மட்டுமே உக்ரைனின் துயரத்துக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று தெரிவித்துள்ள ஜான்சன், தொடர்ந்து பிரித்தானியா உக்ரைனியர்களுக்கு உதவிகள் வழங்கும் என்று கூறியுள்ளார்.