Reading Time: < 1 minute

கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலையால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில் காலநிலை மாற்றம் இதற்கு பிரதான காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிர வெப்ப அலை இந்த வார இறுதியில் மீண்டும் கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை தாக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய கரியமில வாயு உமிழ்வு தொடர்ந்தால் 2040 களில் ஒவ்வொரு ஐந்து முதல் 10 வருடங்களுக்கு இதுபோன்ற தீவிர வெப்ப அலை பதிவாகக் கூடும் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றத்தின் விளைவு இல்லாமல் திடீர் வெப்ப அதிகரிப்பு “கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என 27 விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் வட அமெரிக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் இத்தகைய வெப்ப அலைகளை கிட்டத்தட்ட 150 மடங்கு அதிகமாக்கியுள்ளது.

அசாதாரண வெப்பநிலை ஆயிரம் ஆண்டுகளில் ஒருமுறை இயல்பான நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறினர். இருப்பினும் இந்தக் கோடையின் ஆரம்பத்தில் முன்னோடியில்லாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளமை காலநிலை மாற்றத்தின் விளைவே என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தீவிர வெப்ப அலைகள் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்” என ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ப்ரீடெரிக் ஓட்டோ கூறினார்.

“வெப்ப அலைகள் உண்மையில் மற்ற அனைத்து தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகளையும் விட மிக மிக தீவிரமானவையாக உள்ளன” என்று ஓட்டோ கூறினார். “வெப்ப அலைகளின்போது மரணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கங்கள் வகுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளை ஜூன் மாத இறுதியில் கடும் வெப்ப அலைகள் தாக்கின. மின் இணைப்பு பிளாஸ்டிக் குளாய்கள் உருகும் அளவுக்கு கனடாவின் மேற்கு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்தது.

கடந்த மாதத்தில் கனடா மூன்று முறை வரலாற்றியில் இல்லாத அளவு தீவிர வெப்ப அலைகளின் தாக்கத்தைப் பதிவு செய்தது. ஜூன் 29 அன்று 49.6 செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்தது.

இவ்வாறான நிலையில் மற்றொரு தீவிர வெப்ப அலை இந்த வார இறுதியில் கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.