கனடா அரசாங்கம் நேரிடையாக பிரிட்டன் ராஜ குடும்பத்திற்கு தொகை எதுவும் அளிக்கவில்லை என்றாலும், ஆண்டுக்கு 58 மில்லியன் டொலர் அளவுக்கு செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா அரசாங்கம் பிரிட்டன் ராஜ குடும்பம் சார்பில் செயல்படும் விண்ட்சர் மாளிகையை பராமரித்து வருவதால், ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் டொலர் செலவிடப்படுகிறது.
கனடாவின் கவர்னர் ஜெனரல் அலுவலகம், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் பிரிட்டன் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் கனடா வந்து செல்லும் பயணத்திற்கான செலவுகள் என அனைத்தும் கனடா மக்களின் வரிப்பணத்தில் செலவிடப்படுகிறது.
மட்டுமின்றி, 2022 மே மாதம் இளவரசர் சார்லஸ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக கனடா வந்தபோது செலவிடப்பட்ட தொகை 1.4 மில்லியன் கனேடிய டொலர் என கூறப்படுகிறது.
2022ல் ராணியார் எலிசபெத் காலமான நிலையில், கனேடிய குழுவினருக்கான ஹொட்டல் அறைகளுக்கு என கனடா அரசாங்கம் 400,000 டொலர்கள் செலவிட்டுள்ளது. இதில் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி தங்குவதற்கான இரவு ஒன்றிற்கு 6,000 டொலர் கட்டணம் வசூலிக்கும் அறைக்கான செலவுகளும் உட்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் ராஜ குடும்பத்தின் கனேடிய பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் மேரி சைமன், அவரது மத்திய கிழக்கு நாடுகள் பயணத்தின் போது உணவுக்கு என மட்டும் 80,000 டொலர் செலவிட்டுள்ளார்.
அந்த பயணத்திற்கான மொத்த செலவுகள் 1.3 மில்லியன் டொலர் என கூறுகின்றனர். 2021 அக்டோபர் மாதம் ஜேர்மனி பயணத்திற்கு என மேரி சைமன் 700,000 டொலர் செலவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ராயல் கனடியன் புவியியல் சங்கம் கல்வி நிதியாக $257,000 பெற்றுள்ளது.
மேலும், மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பிரதமர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் செல்வோர் பட்டியல் வெளியாகவில்லை. இதற்கான செலவுகள் குறித்து பின்னர் தகவல் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.