Reading Time: < 1 minute

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பின் தவறால் குடியுரிமை இழந்த பெண்ணுக்கு, மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார். 1991ஆம் ஆண்டு, அவருக்கு Arielle Townsend என்னும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Arielle பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில், 1992ஆம் ஆண்டு, அவரது தாயான Nichola கனடா திரும்பி, தனது மகளுக்கான குடியுரிமைக்காக Mississaugaவிலுள்ள குடியுரிமை அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அலுவலர் ஒருவர், Arielle ஏற்கனவே கனேடிய குடிமகள்தான் என்றும், அவருக்காக மீண்டும் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இது நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இம்மாத துவக்கத்தில் Arielleக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், அவரது குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவிக்கவே, அவர் அதிர்ச்சியடைந்தார். Arielle பிறக்கும் முன், அவரது தாய் குடியுரிமை பெறுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஆகவே, Arielleக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படவேயில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், Arielleக்கு மீண்டும் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம், அதாவது, மே மாதம் 17ஆம் திகதி, குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு Arielleக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விரைவில் அவருக்கு புதிய குடியுரிமை அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த செய்தி Arielleக்கு ஆறுதலையளிப்பதாக அமைந்தாலும், தான் சந்தித்த அனுபவத்தால் தான் இன்னமும் கோபமாக இருப்பதாக தெரிவிக்கிறார் Arielle. மன உளைச்சலும், வேலைக்கு செல்ல முடியாத நிலையுமாக செலவிட்ட கடந்த நாட்களை நினைவுகூரும் அவர், யாருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்கிறார்.