Reading Time: < 1 minute

கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

எனினும், பிரதமர் மீதான மிரட்டல் குற்றச்சாட்டை விட, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிற கடுமையான குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஜேமி டா கோஸ்டா என்ற இந்த நபர் மீது, பிரதமர் மீதான மிரட்டல் தவிர, மிரட்டிப் கப்பம் கோரல், குற்றவியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், 5,000 டாலருக்கு அதிகமான சொத்து சேதம் விளைவித்தல் மற்றும் குற்ற நோக்கத்துடன் முகத்தை மறைத்து நடமாடுதல் ஆகிய பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, டா கோஸ்டா கல்கரி தடுப்புக் காவல் மையத்திலிருந்து காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரது வழக்கறிஞர் அட்ரியானோ இயோவினெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய வழக்கறிஞர் இயோவினெல்லி, “அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையான சிறைத்தண்டனையை வழங்கக் கோரி வருகின்றனர்.

பிரதமருக்கு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை விட, நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகக் கூறப்படும் மிரட்டிப் பணம் பறித்தல் குற்றச்சாட்டிலேயே அதிக தண்டனை எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

கடந்த ஜூலை 25 ஆம் திகதி யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு தூண்டப்பட்டிருந்தது.

ஜேமி டா கோஸ்டாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட யூடியூப் கணக்கிலிருந்து இந்த வீடியோ வெளியானதை அடுத்து, ஜூலை 28 அன்று கனடிய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

தளத்தின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதால் அந்த யூடியூப் பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. டா கோஸ்டா இதுவரை தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.