Reading Time: < 1 minute

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அத்துமீறி நுழைந்தமை, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தமை, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் இராணுவ வீரரான ஹூரன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா தலைநகரான ஒட்டாவாவில் ரைடோ பகுதியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண ஆளுநர் ஜூலி பேயட் அகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆயுதங்களுடன் காரில் சென்ற ஒருவர் குறித்த பகுதியின் நுழைவுவாயில் கதவை உடைத்துக்கொண்டு துப்பாக்கியுடன் பிரதமரின் குடியிருப்பு நோக்கிச் சென்றபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில் மனிரோபா (Manitoba) மாகாணத்தைச் சேர்ந்தவரும் கனேடிய இராணுவத்தில் கடமையாற்றுபவருமாக ஹூரன் (வயது-46) என தெரியவந்தது.

இதேவேளை, பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தமை தொடர்பாக பொலிஸாரிடம் கருத்துக்கூற மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விரைந்து செயற்பட்டு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுத்தமைக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.