கனேடிய பாராளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தின் பட்ஜெட் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கான ஊதியத்துடன் கூடிய சுகயீன விடுமுறை, குறைந்த வருமானம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கான நிதி ஆதரவு, பழங்குடி சமூகங்கள் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை என்.டி.பி. முன்வைத்துள்ளது.
இவ்வாறான விடயங்களை நிறைவேற்றுவ உறுதி செய்தால் ட்ரூடோ அரசுக்கான ஆதரவு குறித்துப் பரிசீலிக்கலாம் என நேற்று வியாழக்கிழமை ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்மீத் சிங் தெரிவித்தார்.
இதேவேளை, தங்களுக்கு உடன்பாடில்லாத விடயங்களை பாராளுமன்றில் எதிர்க்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவா் கூறினார்.
பிரதமர் ட்ரூடோவி்ன் மாயாஜால வாா்த்தைகளையும் வெற்று வாக்குறுதிகளையும் மட்டும் நம்பி அவர்களை ஆதரிக்க முடியாது. இந்த மாதம் காலாவதியாகும் கொவிட் 19 ஊக்குவிப்பு உதவித்திட்டங்களை நீடிப்பது உள்ளிட்ட உறுதியான செயற்பாடுகளின் அடிப்படையிலேயே அவா்களுக்கான ஆதரவு குறித்துத் தீா்மானிக்கப்படும் எனவும் ஜக்மீத் சிங் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி பிரதமர் ட்ரூடோவிடம் இருந்து தங்களுக்கு கோரிக்கை ஏதும் இதுவரை வரவில்லை எனவும் அவா் கூறினார்.
கடந்த பாராளுமன்றத்தைப் போலவே, ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கம் பாராளுமன்றத்தில் திட்டங்களை முன்வைத்து நிறைவேற்ற ஏனைய கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
பெரும்பான்மையை எதிர்பார்த்து தொற்று நோய்க்கு மத்தியில் முன்கூட்டியே தோ்தலை நடத்தியபோதும் அவரால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.