கனடா பாராளுமன்றத்துக்கு நுழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் அந்தோணி ரோட்டா அறிவித்துள்ளார்.
நவம்பர் – 22, திங்கட்கிழமை முதல் எந்தவொரு நபரும் பாராளுமன்றுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் , அவர்களது ஊழியர்கள், பாராளுமன்ற அலுவலக ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கும் இந்த கட்டாய தடுப்பூசி நடைமுறை பொருந்தும்.
தனது புதிய அமைச்சரவை ஒக்டோபர் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் அறிவித்தார். அத்துடன் பாராளுமன்றம் நவம்பர் 22 ஆம் திகதி மீண்டும் கூடும் என்றும் அவா் கூறினார். அத்துடன், லிபரல் கட்சி வேட்பாளர்களுக்கு கட்டாய தடுப்பூசித் திட்டத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஏனைய அரசியல் கட்சிகள் கட்டாய தடுப்பூசிக் கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் எரின் ஓ டூல் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்டாய தடுப்பூசி ஆணையை விட கொவிட் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அவா் வலியுறுத்தி வருகிறார்.
செப்டம்பர் – 20 இடம்பெற்ற தேர்தலில், அவரது கன்சர்வேடிவ் கட்சி 338 இடங்களில் 119 இடங்களை வென்றது. இதேவேளை, மருத்துவ காரணங்களுக்காக கோவிட் தடுப்பூசியைப் பெற முடியாதவர்கள் அதற்கான உறுதிப்படுத்தலுடன், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் ரோட்டா அறிவித்துள்ளார்.
அத்துடன், கனேடிய பாராளுமன்றம் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பாராளுமன்றத்தில் முக கவச கட்டாய நடைமுறையும் ஜனவரி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.