கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒட்டாவாவில் உள்ள அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு தரப்புக்களிடம் இருந்து இது தொடர்பில் வந்த பல நாள் அழுத்தங்களுக்குப் பின்னர் பிரதமர் ட்ரூடோ நேற்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் கம்லூப்ஸ் குடியிருப்புப் பள்ளியில் உயிரிழந்த குழந்தைகளையும் இதுவரை தகவல் அறியாது காணாமல் போயுள்ள குழந்தைகளையும் நினைவுகூர்ந்து தேசத்தின் அஞ்சலியைச் செலுத்தும் வகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என நேற்று தனது ருவிட்டரில் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் பழங்குடியின குடியிருப்பு பள்ளியின் தளத்தில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து இக்குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பழங்குடி சமூகத்தினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் கனடா முழுவதும் தேசியக் கொடிகளைக் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அரசாங்கத்திடம் பழங்குடி சமூகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கனடா முழுவதிலும் உள்ள பழங்குடி சமூகங்களுக்கு இந்தச் செய்தி வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான உரிமை மீறல்களுக்கு தீர்வு காண அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின தலைவர்களில் ஒருவரான ரோசேன் காசிமிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் பல தசாப்தங்களாக நீடித்த குடியிருப்பு பள்ளி முறைமையின் கீழ் கலாசார இனப்படுகொலை இடம்பெற்றதாக 2015 ஆம் ஆண்டில், கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்தது.
1870 முதல் 1990 களுக்கும் இடையில், 150,000 -க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் குடியிருப்புப் பள்ளிகளில் இணைய கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிகள் தேவாலயங்களால் நடத்தப்பட்டன. பழங்குடி குழந்தைகளை வெள்ளை கனேடிய சமுதாயத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான பள்ளிகள் செயற்பட்டன.
குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் மொழிகளைப் பேச முடியாது தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு இணைக்கப்பட்ட குழந்தைகள் பலவிதமான உடல், உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்தனர்.
1890 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட கம்லூப்ஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி கனடாவின் குடியிருப்பு பள்ளி அமைப்பில் மிகப்பெரியதாக இருந்தது.
4,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் கனேடிய குடியிருப்பு பள்ளிகளில் உயிரிழந்ததாக அறியப்படுகிறது. எனினும் அவா்கள் தொடர்பான தகவல்கள் இல்லை. இவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என புதிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லி அங்கஸ் நேற்று தனது ருவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் 2008 ஆம் ஆண்டில் குடியிருப்பு பள்ளி முறையில் இடம்பெற்ற ஒடுக்குமுறைகள் குறித்து உத்தியோகபூா்வமாக மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில் கனேடிய தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு பிரதமர் ட்ரூடோ நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விட முன்னரே ஒட்டாவா மற்றும் டொராண்டோ மேயர்கள் உட்பட பல உள்ளூர் தலைவர்கள், கம்லூப்ஸ் குடியிருப்புப் பள்ளியில் இறந்த பழங்குடி குழந்தைகளுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.