கனடா எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் இந்தக் கட்டுப்பாட்டு விதி தளர்வுகள் மற்றும் தனிமைப்படுத்தல் தளர்வுகள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கே பொருந்தும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடியர்கள் அனைவரும் மீண்டும் பயணிக்க ஆர்வமாக உள்ளனர் என்பதை புரிந்துகொள்கிறேன். எனினும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெறும்வரை பொறுமை தேவை என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ட்ரூடோ கூறினார்.
கனேடியர்களை பாதுகாக்கவும், நமது பொது சுகாதார அமைப்புகள் மீது ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கவும் ஒரு தடுப்பூசி ஓரளவு பயனளிக்கிறது. எனினும் இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்ட பின்னரே முழுமையான பாதுகாப்பைப் பெறுவது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
மக்கள் தங்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற வேண்டும். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கே கட்டுப்பாட்டு தளா்வுகள் பொருந்தும் எனவும் அவர் கூறினார்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாகாண அரசுகளுடன் மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆலோசிக்கும் என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.
அமெரிக்க மாகாணங்களில் மாறுபடும் தொற்று நோய் நிலையைக் காரணம் காட்டி எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தயக்கம் வெளியிட்டு வருகிறார்.
அமெரிக்காவுடனான கனடாவின் பயணக் கட்டுப்பாடுகள் 2020 மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடு ஜூன் 21 அன்று காலாவதியாகிறது.
இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து தனது குழுவினர், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள சுகாதார வல்லுநர்களுடன் பிரதமர் ட்ரூடோ ஆலோசித்து வருகிறார்.
அடுத்த சில வாரங்களில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று பிரதமர் கூறினார்.
இதேவேளை, கனடாவுடனான அமெரிக்க எல்லையை ஜூலை 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்குமாறு அமெரிக்க அரசியல்வாதிகள் பைடன் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.