கனடா இந்திய தூதரக உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் இணைய தளங்கள், கனடாவுக்குச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்குச் செல்லுமாறு மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கத் துவங்கியுள்ளன.
கனடா இந்திய மோதல், கனடாவிலிருக்கும், மற்றும் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் திட்டத்திலிருக்கும் இந்திய மாணவ மாணவிகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.
இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, கனடா அதற்கு எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது என்பது தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் இணைய தளங்கள், மாணவமாணவியர், கனடாவுக்கு உயர் கல்வி கற்கச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்குச் செல்லுமாறு ஆலோசனை கூறத்துவங்கியுள்ளன.
ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே கனடாவிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துவிட்ட மாணவ மாணவிகள், கல்லூரிகளில் சேர்ந்துவிட்ட மாணவ மாணவிகள், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
கனடா இந்திய தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் 21ஆம் திகதி கனேடியர்களுக்கு விசா வழங்கும் சேவை காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டதுமே, திகிலடைந்த ஏராளம் மாணவ மாணவிகள், தாங்கள் கனடா செல்ல விண்ணப்பித்துள்ள அலுவலகங்களை பதற்றத்துடன் அழைக்கத் துவங்கியுள்ளார்கள்.
விசா பெற்றுவிட்டவர்கள், கனடாவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியுமா, பிரச்சினை மேலும் பெரிதாகுமா என வினவத் துவங்கியுள்ளார்கள்.
உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் இணைய தளங்கள், மாணவமாணவியர், கனடாவுக்கு உயர் கல்வி கற்கச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்குச் செல்லலாம் என எளிதாக கூறிவிட்டாலும், ஏற்கனவே பெருந்தொகையை கல்விக்கட்டணமாக செலுத்திவிட்ட மாணவ மாணவியருக்கு, அந்த கட்டணத்தை இழந்துவிட்டு மீண்டும் வேறொரு நாட்டுக்கு கல்வி கற்க விண்ணப்பிப்பது எளிதான விடயமில்லை.
ஆக, இரு நாடுகளின் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுமா, மாணவ மாணவியர் கனடாவில் பாதுகாப்பாக கல்வி கற்கலாம் என்னும் உறுதியான நிலை ஏற்படுமா, என்று பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.