அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்னர் முதல் சர்வதேச விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து 113 சர்வதேச நாடுகளின் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று புறப்பட்டது.
கட்டார் ஏர்வேஸ் விசேட விமானம் காபூலில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு நேற்று கட்டார் தலைநகர் டோகாவில் தரையிறங்கியது.
இதேநேரம் காபூலில் இருந்து வெளிநாட்டவர்கள் உட்பட மற்றொரு தொகுதி பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் இன்று வெள்ளிக்கிழமை புறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் சமீபத்தில் கட்டார் சென்றிருந்தபோது காபூலில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்ற உதவுமாறு அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த விமானத்தில் 13 பிரிட்டிஷ் பிரஜைகள் காபூலில் இருந்து கட்டார் வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்தார். இவா்களை வெளியேற்ற உதவியதற்காக கட்டாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இந்த விமானத்தில் தங்கள் நாட்டு பிரஜைகள் 43 பேர் இருந்ததாக கனடா அரசு உறுதி செய்துள்ளது. நெதர்லாந்து தனது பிரஜைகள் 13 பேர் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பிரஜைகளும் இந்த விமானத்தில் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாக மற்றும் கடினமான இராஜதந்திரம் முயற்சிகளின் விளைவாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் இதற்கு உதவியதற்காக கட்டாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.