Reading Time: < 1 minute

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து இரு நாடுகளின் எல்லைகளை மீளத் திறக்கும் விடயம் குறித்துப் பேசியுள்ளனர்.

பிரிட்டனில் இடம்பெற்றுவரும் ஜி-07 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் பங்கேற்றுள்ள நிலையிலேயே மாநாட்டுக்குப் புறம்பாக இந்த விடயம் குறித்து இருவரும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கோவிட் 19 தெற்று நோய் நெருக்கடியை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக கனடா -அமெரிக்கா எல்லைகள் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.

எனினும் தற்போது இரு நாடுகளிலும் அதிகளவான மக்கள் கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ள நிலையில் வரவுள்ள கோடை காலத்தில் எல்லைகளை மீறத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் நேற்று பேசியுள்ளனர். இந்த உரையாடல் மிகவும் சுமுகமான முறையில் அமைந்ததாக பெயர் குறிப்பிட விருப்பாத கனேடிய அரச உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது சீனாவின் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் விடுதலை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.