Reading Time: < 1 minute

அமெரிக்காவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் வகை செய்யும் நிறைவேற்று அதிகார நிர்வாக உத்தரவுகளில் (“Buy American” plan) ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ள நிலையில் இது குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுடன் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று கலைந்துரையாடினார்.

கனடாவின் உள்நாட்டு உற்பத்திகளில் பெரும்பகுதி அண்டை நாடான அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கவும் இறக்குமதிகளைத் தவிர்க்கும் நோக்குடனும் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவு கனடாவின் ஏற்றுமதி தொழில் துறையில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையிலேயே இது குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுடன் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று திங்கட்கிழமை பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கைத் திட்டத்தால் கனடாவுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பது குறித்து பிரதமர் ட்ரூடோ விவாதித்தார்.

வட அமரிக்க நாடுகளிடையே பன்முகத்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அமெரிக்க உற்பத்திகளை வாங்குங்கள் என்ற அமெரிக்காவின் கொள்கையை வட அமெரிக்க உற்பத்திகளை வாங்குங்கள் என விரிபுபடுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க துணை ஜனாதிபதியி்டம் கோரிக்கை விடுத்துள்ளதாக ட்ரூடோ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க – கனடா நாடுகளுக்கு இடையிலான சட்டவிரோத ஆயுதக் கடத்தல்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்குத் தீா்வு காணுதல் மற்றும் சீனாவால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடியர்களான மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் குறித்தும் கமலா ஹரிஸ் – ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் இதன்போது விவாதித்தனர் எனவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இடையிலான இரு தரப்பு நேரடிப் பேச்சுக்கள் விரைவில் இடம்பெறவுள்ளன.

தொற்று நோய் நெருக்கடி காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் இறுக்கமாக பயணக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஏதோவொரு வகையில் இந்தச் சந்திப்பு விரைவில் இடம்பெறும் என கனேடிய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதற்கான திகதி உறுதி செய்யப்படவில்லை.

ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் தொலைபேசி அழைப்பின் ஊடாகப் பேசிய முதல் வெளிநாட்டுத் தலைவராக கனேடியப் பிரதமர் ட்ரூடோ உள்ளார்.

இந்தப் பேச்சின்போது கனடா-அமெரிக்க இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தங்கள் விருப்பங்களை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.