கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில் புலம்பெயர்வோர் எல்லை கடக்கப் பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது.
இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன.
Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவார்கள். அதனால் பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
அவர்கள் அஞ்சியது போலவே, கனடா அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக, கடந்த வியாழக்கிழமை, 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிரவீன் சௌத்ரி (50), அவரது பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20). பிரவீனுடைய மனைவி குறித்த விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை அந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகே ஒரு படகு, கவிழ்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு, அந்த படகை Casey Oakes (30) என்பவர் இயக்கியதை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது, Casey Oakesஐக் காணவில்லை. வியாழக்கிழமையிலிருந்து Casey Oakesஐ பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், அவருக்கும் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.
Casey Oakes கண்டுபிடிக்கப்பட்டால், வழக்குக்கு உதவும் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்பதால், அவரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.