கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையில் நடந்தே கனடாவுக்குள் நுழையமுயன்ற சிறுபிள்ளைகள் உட்பட இந்தியர்கள் நான்கு பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலியாகிக் கிடந்த சம்பவம் நினைவிருக்கலாம்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோல 2022இல், 45,250 புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவிலுள்ள கியூபெக்குக்குள் நுழைந்துள்ளார்கள்.
அவர்களில் பலர், Roxham Road என்ற இடம் வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவின் கியூபெக் மாகாணத்துக்குள் நுழைந்துள்ளார்கள்.
தற்போது அதேபோல அதே Roxham Road என்ற இடம் வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்ந்தோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமையன்று அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் எந்த நாட்டவர், எப்படி உயிரிழந்தார் என்பதுபோன்ற விடயங்கள் தெரியவரவில்லை.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.