Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஷேர்புரூக் என்னும் நகரில் மனைவி ஒருவர் தனது கணவனை நாய்ப் பட்டியில் கட்டித் தெருவில் நடக்க அழைக்கச் சென்றதற்காக பொலிசார் அவர்கள் இருவருக்கும் தலா $1,500 தண்டம் விதித்திருக்கிறார்கள்.

கோவிட் தொற்று அதிகமாகவுள்ள கியூபெக் மாகாணம் தேவையற்ற மக்கள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காகச் சமீபத்தில் அவசரகாலப் பிரகடனத்தைச் செய்திருந்தது. இதன்போது மாலை 8 மணிக்குப் பிறகு, அவசியமென வரையறுக்கப்பட்ட தொழில்களும், சேவைகளுமே நடமாட்ட அனுமதி பெற்றிருந்தன. அதில் நாய் நடப்பித்தலும் ஒன்று. ஆனால், நாய் நடப்பித்தலின்போது ஒருவர் மட்டுமே தனது நாயைத் தெருவில் நடப்பிக்க முடியும்.

இரவு எட்டு மணிக்குப் பிறகு வெளியில் உலாவச் செல்வதற்கு விரும்பிய ஒரு தம்பதிகள் இச் சட்டத்தைப் பாவித்து வெளியே போகத் தீர்மானித்தார்கள். அதன்படி மனைவி தனது கணவனின் கழுத்தில் நாய்ப்பட்டியைக் கட்டி அவரைத் தெருவில் நடப்பித்துக்கொண்டு சென்றிருக்கிறார். இதையறிந்த பொலிசார் கியூபெக் அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் அவர்கள் இருவருக்கும் தலா $1,500 தொகயை அபராதமாக விதித்திருக்கிறார்கள்.

கணவன் எப்போதுமே தனது நாய் தான் என்றும், அதனால் இச் சட்டத்தின் பிரகாரம் தான் அவரை நடப்பிக்க அனுமதி உண்டென்றும் கூறித் தான் அத் தண்டத்தைச் செலுத்தப்போவதில்லை எனவும் மனைவி தெரிவித்துள்ளதாக மொன்றியாலிலிருந்து வளிவரும் இணையத்தளமான ‘கல்ட் மொந்றியால்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பக்கத்தில் உள்ளது அந்த உண்மையான ஜோடி படம் இல்லை (actual couple not pictured)