Reading Time: < 1 minute

நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டாய தடுப்பூசி ஆணையை நீக்கும் அறிவிப்பை கனடா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சி.பி.சி. (cbc news) செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு ரயில் மற்றும் விமான பயணங்கள், சர்வதேசப் பயணங்களை மேற்கொள்வோர் கொவிட் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற உத்தரவு கனடாவில் நடைமுறையில் உள்ளது. தடுப்பூசி பெறாதோர் ரயில், விமான சேவைகளை அணுக முடியாது. அத்துடன், பொதுச் சேவைகளை பெறுவதிலும் தடை உள்ளது.

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சம்பளமற்ற கட்டாய விடுமுறையில் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொற்று நோய் கட்டுப்பாடுகள் குறித்து கனேடிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் கட்டுப்பாடுகள் இன்று நீக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் கனடாவில் புதிய கொவிட் திரிவுகள் உருவானால் மீண்டும் கட்டாய தடுப்பூசி ஆணை அமுலுக்குக் கொண்டுவரப்படலாம் எனவும் சி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெடுக்கப்படும் ஏழுமாற்று அடிப்படையிலான கொவிட் பரிசோதனை இம்மாத இறுதி முதல் இடைநிறுத்தப்படும் என கனடா மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் கனடாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசைகளில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நெருக்கடிகளைத் தவிர்க்க ஏதுவாக ஏழுமாற்றான விமான நிலைய சோதனைகளை இடைநிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுமாற்றான கொவிட் பரிசோதனை காரணமாகவே விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாக சில தொழில்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

விமான பணியாளர் பற்றாக்குறை காரணமாக ரொராண்டோ – பியர்சன் விமான நிலையத்தில் பல மணி நேரங்கள் பயணிகள் காத்திருக்க நேரிடுவதாக பல தடவைகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் தாமதங்களை தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் விமான தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா (AC.TO) ஜூன் முதல் வாரத்தில் பியர்சன் விமான நிலையத்துக்கான சேவையில் ஈடுபடும் ஏறக்குறைய 10% விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் (Cirium) தரவுகள் தெரிவிக்கின்றன.