கனடா மிகவும் கடுமையான கோவிட்19 பயண கட்டுப்பாடுகளை அமுல் செய்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நாட்டிற்குள் விமான பயணங்கள் மூலம் வருவோர் தொகை 55% குறைந்துள்ளதாக கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவதற்கு முன்னரான பெப்ரவரி -01 முதல் 21-ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 114,139 பயணிகள் விமானம் மூலமும் 501,322 பேர் தரைவழி எல்லைகள் ஊடாகவும் கனடா வந்துள்ளனர்.
பெப்ரவரி-22-இல் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தன. புதிய கட்டுப்பாடுகளின் கீழ் விமானத்தில் வருபவர்கள் விமானப் பயணத்தக்கு மிக அண்மைய காலத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆா். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் கனடா வந்ததும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் சொந்தச் செலவில் தங்களை 3 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த சில வாரங்களின் நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 54.7 வீதத்தால் குறைந்துவிட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 22 முதல் மார்ச் 14 வரை மொத்தம் 65,253 பயணிகள் விமானம் மூலம் கனடா வந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கனடா- அமெரிக்க எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்பட்டபோதும் தரை வழியாக கனடாவுக்குள் வருவோர் எண்ணிக்கை 8.9% அதிகரித்துள்ளது.
பெப்ரவரி 22 முதல் மார்ச் 14 வரை மொத்தம் 5 இலட்சத்து 46 ஆயிரத்து 83 பயணிகள் தரை வழி எல்லைகள் ஊடாக கனடா வந்துள்ளதாக கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.