கஞ்சா விற்பனை நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு கனேடிய மக்கள் சுமார் 131 பில்லியன் டொலர்கள் தொகையை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இது சராசரி ஆண்டு வருவாயை ஒப்பிடுகையில், ஒவ்வொரு கனேடிய குடிமகனும் தலா 43,000 டொலர் தொகையை இழப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் கனேடிய கஞ்சா தொழில் சரிவடைவதற்கு காரணம் பெடரல் அரசாங்கத்தின் புதிய விதிகள் தான் என முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரொறன்ரோவில் கஞ்சா பொருட்களுக்கான கடை ஒன்றை 2021 செப்டம்பரில் திறந்த கனேடியர் ஒருவர், கடும் நெருக்கடி காரணமாக ஒரே ஆண்டில் கடையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் குறித்த கடையை அவர் குத்தகைக்கு எடுத்துள்ளதால், மாதம் 6,000 டொலர் என மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வாடகை செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமது கடைக்காக சுமார் 300,000 டொலர் செலவிட்டதாக கூறும் அவர், திவால்தான் இதிலிருந்து வெளியேற ஒரே வழி என தெரிவித்துள்ளார். உரிமம் பெறுவதற்காக மட்டும் 10,000 டொலர் செலவிட்டதாக கூறும் அவர், ஊழியர்களுக்கு ஊதியம் உட்பட எஞ்சிய செலவுகள் எதையும் உட்படுத்தாமல் 280,000 டொலர் செலவானதாக குறிப்பிட்டுள்ளார்.
கனடா அரசாங்கமே இப்படியான ஒரு தொழிலை ஊக்குவித்ததுடன், தற்போது அதன் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் முதலீட்டாளர்கள்.