நாடு முழுவதும், ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் உடல் ரீதியான தூரத்தைக் கடைபிடிக்க வேண்டுமென அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
ரொறன்ரோவின் டிரினிட்டி பெல்வுட்ஸ் பூங்காவை வார இறுதியில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொருளாதாரம் மீண்டும் திறக்கத் தொடங்கும் போது மக்கள் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்பது குறித்து கொஞ்சம் குழப்பமடைவது இயல்பானது. ஆனால் கொவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் பரவுவதை தவிர்க்க நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். மக்களிடம் புத்திசாலித் தனமான முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தப் போகிறோம்.
நீங்கள் பின்பற்றும்படி கேட்கப்படும் விதிகள் மற்றும் பொது சுகாதார பரிந்துரைகள் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபட்டிருக்கலாம், அது குழப்பமானதாக இருக்கக் கூடும். நாடு முழுவதும், ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது. ஆகவே உடல் ரீதியான தூரத்தைக் கடைப்பிடிப்பதைத் தொடருங்கள். இதுதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது, நம்முடைய அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பது’ என கூறினார்.