Reading Time: < 1 minute

பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால், தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law.

பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.

இந்நிலையில், Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அந்த ரசாயனத்தை அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Kenneth Lawவின் கைதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து அந்த ரசாயனத்தை வாங்கிய பிரித்தானியர்கள் தொடர்பில் பிரித்தானிய பொலிசார் விசாரணையைத் துவக்கினார்கள்.

விசாரணையில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆம், இரண்டு ஆண்டுகளில் 232 பிரித்தானியர்கள் Kenneth Lawவிடம் அந்த ரசாயனத்தை வாங்கியுள்ளார்கள்.

அவர்களில் 88 பேர் உயிரிழந்துள்லார்கள். ஆனாலும், அவர்களது உயிரிழப்புக்கு அந்த ரசாயனம்தான் நேரடிக் காரணம் என்பது உறுதிசெய்யப்படவில்லை. ஆகவே, இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயம் தொடர்பில் விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.