ஒன்றாரியோவில் கடந்த வார இறுதி நாட்களில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் 8000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டாம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான நீண்ட வார இறுதி நாட்களில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாண பொலிசார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் வேகமாக வாகனம் செலுத்தியவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் இருக்கைப் பட்டிகளை அணியாத சாரதிகள் மற்றும் பயணிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் அவசரமாக பயணம் செய்யும் வாகனங்களுக்கு சில சாரதிகள் இடத்தை ஒதுக்கி தர வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வார இறுதி நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேகக்கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பில் சுமார் 4000 முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி வாகனத்தை செலுத்தும் போது உயிர் சேதங்களை தவிர்க்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.