Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவசியமற்று வீட்டுக்கு வெளியே வாகனங்களில் அல்லது தனியாக வெளியேவரும் நபர்களை இடைமறித்து விசாரிக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே நான்கு வாரங்களுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர கால நிலை உத்தரவு மற்றும் வீட்டில் தங்கும் உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் நேற்று வெளியிட்டார்.

தொற்று நோய் தொடர்ந்து அதிகரிப்பதுடன், மருத்துவமனைச் சோ்க்கையும் உயர்ந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினார்.

ஒன்ராறியோவின் புதிய அறிவிப்பின் பிரகாரம் அவசரகால நிலை மற்றும் வீட்டில் தங்குவதற்கான உத்தரவுகள் மே 20 வரை நடைமுறையில் இருக்கும்.

வானங்களில் வீட்டை விட்டு வெளியேறுவோர் அல்லது வீட்டை விட்டு வெளியேறும் தனி நபர்களை இடைமறித்து அவா்கள் வெளியேறுவதற்கான காரணம் குறித்து விசாரிக்கும் அதிகாரம் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தலைமை வழங்குரைஞர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்தார்.

தங்களது வசிப்பிடத்தில் இல்லாத எந்தவொரு நபரினதும் முகவரியைக் பெற்றுக்கொள்ளவும் அவா்கள் வீட்டை விட்டு வெளியேறியதற்கான நோக்கத்தை அறிந்துகொள்ளவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவா் விளக்கமளித்தார்.

இதேவேளை, சனிக்கிழமை முதல் சிறிய அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் 25 வீத திறனில் மட்டுமே இயங்க முடியும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை முதல் கியூபெக் மற்றும் மானிடோபா மாகாணங்களுக்கான தரைவழிப் பயணங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பயணங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக இந்த மாகாணங்களுங்களுடனான எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.

அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக ஒன்ராறியோவிற்கு வரும் பயணிகள் எல்லையில் வைத்து திருப்பி விடப்படுவார்கள்.

எனினும் கனடாவுக்குள் வரும் விமான பயணிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, புதிய கட்டுப்பாடுகளின் கீழ் திங்கட்கிழமை முதல் மத வழிபாட்டுத் தலங்களில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 10 போ் மட்டுமே ஒன்றுகூட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.