ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கிட்டத்தட்ட அடங்கிவரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் தொற்று நோய் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக மாகாண தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் எச்சரித்துள்ளார்.
தொற்று நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்தால் நிலைமையைச் சமாளிக்க மாகாணம் தயாராகி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஒன்ராறியோவின் தொற்று நோய் நிலைமை குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கும்போதே டாக்டர். கீரன் மூர் இவ்வாறு கூறினார்.
மாகாணத்தில் குளிரான காலநிலை ஆரம்பிக்கும்போது தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கும் என சில கணிப்பீடுகள் கூறுவதையும் அவா் சுட்டிக்காட்டினார்.
“செப்டம்பர் மாதத்தில் கொவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்று நான் முற்றிலும் எதிர்பார்க்கிறேன்,” என்று மூர் தெரிவித்தார்.
இந்நிலையில் தொற்று நோய் நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் வகையிலான ஏற்பாடுகளில் உள்ளூர் பொது சுகாதார பிரிவினருடன் இணைந்து மாகாண சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாகாணத்தை முழுமையாகத் திறக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். மீளத் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்துக்கு அப்பால் செல்ல முன்னர் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேர் ஒரு கோவிட் -19 தடுப்பூசியையும் 75 சதவீதம் பேர் தங்கள் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தலைமை மருத்து அதிகாரி டாக்டர். கீரன் மூர் கூறினார்.
ஒன்ராறியோவில் இதுவரை கொவிட் தடுப்பூசி பெறத் தகுதியானவர்களில் 78 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 54.6 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.