ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டு அலைகளை விட இன்னும் மோசமாக இருக்கலாம் என தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒன்ராறியோ கோவிட்19 தொற்று நோயின் மூன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக மாகாண தலைமை சுகாதார வைத்திய அதிகாரி திங்கட்கிழமை அறிவித்தார்.
இந்நிலையிலேயே தொற்று நோயின் மூன்றாவது அலை முன்னைய அலைகளை விட மோசமாக இருக்கும் என மாகாண தொற்று நோய் நிபுணர் டாக்டர் அப்து ஷர்காவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர் தொற்று நோய் சிறப்பாகப் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் கூட மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. அத்துடன், கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் மிக விரைவான பரவலுக்கு வழிவகுக்கும் எனவும் அவா் தெரிவித்தார்.
தற்போது இளையவர்கள், ஆரோக்கியமான நபர்களும் அதிகளவில் தொற்று நோய்க்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நபர்களிடம் அறிகுறிகள் பெரும்பாலும் தோன்றாமல் இருக்கலாம். இதனால் இவர்கள் அதிகளவானவர்களுக்கு தொற்று நோயைப் பரப்பும் காவிகளாக மாறலாம் எனவும் டாக்டர் அப்து ஷர்காவி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சூழலில் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் எனவும் அவா் எச்சரித்தார்.
தொற்று நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும். அதேநேரம் மற்றொரு சமூக முடக்கலுக்கும் செல்ல நேரிடலாம் எனவும் டாக்டர் அப்து ஷர்காவி குறிப்பிட்டார்.
எங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் விரைவாக கிடைக்கவில்லை. அதேநேரம் அஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் தொடர்பான சர்ச்சைகளும் தொடர்கின்றன. இந்நிலையில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் வரை தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க சமூக முடக்கல் மீண்டும் தேவைப்படும் எனவும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அப்து ஷர்காவி மேலும் தெரிவித்தார்.